
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் தெக்குப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் பலர் கூட்டமாக தெக்குப்பட்டு அம்பலூர் சாலைப்பிரிவில் அமர்ந்து திடீரென்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் இச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவலறிந்து சம்பவா இடத்திற்கு விரைந்து வந்த அம்பலூர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதானம் செய்து சாலையில் இருந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.
பின்னர் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அப்போது அப்பெண்கள் கூறியதாவது;
நூறுநாள் வேலைத்திட்டத்தில் சரிவர தங்கள் பகுதி பெண்களுக்கு ஊராட்சி நிர்வாகம் தருவதில்லை என்றும் வருடத்தில் வெறும் 30-50 நாட்கள் வரையில் தான் தங்களுக்கு வேலை தரப்படுகிறது என்றும் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றனர். மேலும் இதுமட்டுமன்றி ஊராட்சி நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் ஆதங்கத்துடன் கூறினர்.நூறுநாள் வேலைத் திட்டத்தில் சமூகநீதி என்பது நிலைநாட்டப்பட வேண்டும் என்பதும் போராட்டக்காரர்களின் தலையாய கோரிக்கையாக உள்ளது.
போராட்டத்தின்போது நாட்றம்பள்ளி வருவாய் ஆய்வாளர் நந்தினி மற்றும் விஏஒ நிசார்அகமது மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அரசு அதிகாரிகள் பலர் இருந்தனர்.
-S.மோகன்