சென்னை: டாஸ்மாக்கிற்கு எதிரான மக்கள் எழுச்சியை அடக்குமுறையால் ஒடுக்க முடியாது. மதுக்கடைகளை அரசால் இனி நடத்த முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் குற்றம் சாட்டுகிறேன் என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டதாக கூறி ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். தேசத் துரோக வழக்கு காரணமாக அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் இந்த தேசத்துரோக வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் தானாக முன் வந்து ஏப்ரல் 3 ஆம் தேதி காலை எழும்பூர் நீதிமன்றத்தின் 13வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன்னிலையில் ஆஜரானார் வைகோ. நீதிபதியிடம் பிணையில் செல்ல விருப்பமில்லை என வைகோ தெரிவித்ததாக கூறியதையடுத்து, சிறையிலடைக்கப்பட்டார். சென்னை புழல் சிறையில் இருந்து வைகோ ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். 52 நாள் சிறைவாசத்துக்குப்பிறகு ஜாமினில் வந்த வைகோவை மதிமுக தொண்டர்கள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழகத்தில் மதுக்கடைகளை இனி நடத்த முடியாது என்று வைகோ கூறினார். மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் பெண்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த வைகோ, பெண்கள் மீது அடக்குமுறையை ஏவ கூடாது என்றார். மக்கள் உணர்வுகளை புரிந்து முழுமதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தினார்.