தமிழகத்தை அச்சுறுத்தி வந்த ‘கஜா’ புயல், வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 முதல் கரையை கடக்கத் தொடங்கியது. சுமார் 4 மணி அளவில் புயலின் கண் பகுதி வேதாரண்யம் அருகே அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. அதைத் தொடர்ந்து காலை 6 மணி அளவில் புயல் முழுமையாக கரையைக் கடந்தது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலசந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக விடுப்பில் இருந்தார். ‘கஜா’ புயல் தீவிரமடைந்ததால், தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது உடனே பணிக்கு திரும்பிய அவர், தனது ஆய்வுக் குழுவினருடன், இரவு பகலாக கஜா புயலின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வந்தார்.
இப்புயலின் நகர்வை பல்வேறு அரசுத் துறைகளுக்கும், பொதுமக்களுக்கும் எஸ்.பாலசந்திரன் தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்தார். இப்பணியில் கடந்த இரு நாட்களாக ஓய்வின்றி, உறக்கமின்றி அவர் தலைமை யிலான குழு ஈடுபட்டு வந்தது. இக்குழு மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு வானிலை நிலவரங்களை உடனுக்குடன்வழங்கி, மீட்பு நடவடிக்கைகளுக்குசிறப்பான ஒத்துழைப்பை வழங்கியது. குறிப்பாக வியாழன் மாலை முதல் வெள்ளி காலைவரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை புயல் கரையை கடக்கும் நிகழ்வை பொதுமக்களுக்கு புரியும் வகையில் எளிமை யாகவும், சுருக்கமாகவும் பாலசந்திரன் தெரிவித்து வந்தார். அதனால் அரசுத்துறை அதிகாரிகளும், பொதுமக்களும் இயக்குநர் பாலசந்திரனுக்கும், அவரது குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக எஸ்.பாலசந்திரன் கூறும் போது, “மக்களுக்கு உதவுவதற்காக இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததை நினைத்து பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம். உறக்கமின்றி உழைப்பதை எங்கள் குழு சிரமமாகவே நினைக்கவில்லை. அது எங்கள் கடமை” என்றார்.